சிங்கப்பூரின் முன்னாள் பிரதமரும், தற்போதைய அரசவை ஆலோசகருமான லீ குவான் யூ, அந்நிய நாடுகளைப்பற்றி அதிகம் கருத்து சொல்ல மாட்டார்! அத்திபூத்த மாதிரி அவர் சொன்னால், அதை அத்தனை நாடுகளும் படுகவனமாகக் காதில் வாங்கிக்கொள்ளும்! உலக நாடுகள் அத்தனையும் உற்றுப்பார்க்கிற அளவுக்கு சிங்கப்பூரை சூப்பர் ஸ்பீடில் முன்னேற்றிக் காட்டிய இவரின் லேட்டஸ்ட் மன ஓட்டங்களைப்பற்றி 'லீ குவான் யூவுடன் ஓர் உரையாடல்' என்று வெளியாகியுள்ள ஒரு சமீபத்துப் புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு விஷயங்கள் குறித்து லீ குவான் யூவுடன் தான் பேசியதை... டாம் ப்லேட் என்ற அமெரிக்கப் பத்திரிகையாளர் எழுதியுள்ளார். புத்தகத்தின் ஒரு பகுதி, இலங்கை அரசின் அராஜகங்களை அப்பட்டமாகச் சுட்டிக்காட்டுகிறது.
சிங்கப்பூரின் பிதாமகன் உதிர்த்த வார்த்தைகள், ஈழத் தமிழர்களின் மரண ஓலங்களுக்கு மருந்து போடுவதாக இருக்கிறது. இனி புத்தகத்தில் இருந்து....
''இலங்கையில் போர் முடிந்து அமைதி நிலவுகிறது என்று எங்காவது படித்தால், சிரிப்புதான் வருகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பை இலங்கை ராணுவம் எதிர்த்து வென்றிருந் தாலும், லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்திருப்பது அநியாயம்!
நான் ராஜபக்ஷேவின் சில பிரசாரங் களையும், மேடைப் பேச்சுகளையும் கேட்டிருக்கிறேன். அதை அலசிப் பார்க்கும்போது, அவரை ஒரு சிங்களத் தீவிரவாதி ('எக்ஸ்ட்ரீமிஸ்ட்') என்றே கருத வேண்டியுள்ளது. அப்படிப்பட்டவரின் மனதை மாற்றுவது எளிதான காரியம் அல்ல.
மக்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் சுதந்திரம் அளிக்கப்படுகிறது என்பதால் மட்டுமே இலங்கையை ஒரு குடியரசு நாடு என்று கூறிவிட முடியாது. அந்த நாட்டில் வாழும் சிங்களர்களுக்கு உரிமை இருக்கிற அதே அளவு தமிழர்களுக்கும் தரப்பட வேண்டும். ஆனால், அந்த நாட்டு வரலாறைப் புரட்டிப் பார்த்தால், அப்படி இல்லை. ஜாஃப்னாவில் தமிழர்களுக்குச் சிங்களர்களால் இழைக்கப்படும் கொடுமைகளைப் பார்த்தாலே, இது புரியும். எனக்கென்னவோ, சிங்களர்கள் தாழ்வு மனப்பான்மையால்தான் தமிழர் களை விரட்டுகின்றனர் என்று தோன்றுகிறது. சிங்களர்களைவிட தமிழர்கள் அதிகச் செயல்திறன் கொண்டவர்கள். அப்படி ஒரு நிலையில், நானும் ஒரு தமிழனாக இருந்திருந்தால், அவர்களை எதிர்த்து இயல்பாகவே கொதித்து எழுந்திருப்பேன்!'' என்று தமிழர்களின் குரலாக அந்தப் புத்தகத்தில் லீ குவான் யூ ஒலித்திருக்கிறார்.
மேலும் அந்தப் புத்தகத்தில், ''சிங்கப் பூரைப் பொறுத்தவரை, இந்த நாட்டின் முன்னேற்றத்துக்காக, பல இன மக்களும் பாடுபட்டு வந்தாலும், சீனர்களையும் இந்தியர்களையும்போல அயராது உழைப்பவர்களைக் காண்பது அரிது. அதற்காக மனநெருடல் கொண்டு... 'இந்த நாட்டில் வாழ மற்ற இனத்தவர்களுக்கு உரிமை இல்லை' என்று தடையா போடுகிறோம்? நொடிக்கு 10 சாதிக் கலவரம் என்று வெடிக்கும் பல நாடுகளை ஒப்பிடும்போது, எவ்விதச் சண்டையும் சச்சரவும் இன்றி எல்லா இனத்தவர்களும் இங்கே அமைதி யாக வாழ்வது எனக்கு சந்தோஷம் அளிக்கிறது.'' என்று ஒரு சிறந்த தலைவனுக்குரிய செருக்கோடு பெருமிதம்கொள்ளும் லீ குவான் யூ,
''நான்காம் கட்ட ஈழப் போரில் தமிழர்களின் இந்தத் தோல்வி தற்காலிக மானதே. அவர்கள் வெகுநாட்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். கூடிய விரைவில் இலங்கை அரசுக்கு எதிராகத் திரும்பவும் போர் தொடுப்பார்கள். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை!'' என்று கணித்திருப்பதைத்தான் உலக நாடுகள் சீரியஸாகக் கவனிக்கின்றன.
இவரது கணிப்புகள் பல சமயம் 'நச்'சென்று நிஜமாகிவிடுவதுதான் இதற்குக் காரணம். புகழ்பெற்ற அமெரிக்க அரசியல் ஆய்வாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர், ''இரண்டு தலைமுறை அமெரிக்க ஜனாதிபதிகள், லீ குவான் யூவின் அறிவுரைகளைக் கருத்தில்கொண்டு நன்மை பெற்றது உண்டு. சீனாவின் எதிர்கால அசுர வளர்ச்சியை முன்கூட்டிச் சொன்னதும் இந்தத் தலைவர்தான். இதனாலேயே, சீனாவின் கம்யூனிஸ்ட் தலைவராக இருந்த புகழ் பெற்ற தலைவர் டெங்க் சியாவுபிங்க், தனது மிகப் பெரிய முடிவுகளை எல்லாம் லீயிடம் ஆலோசித்த பின்னரே எடுத்தார். அப்படிப் பட்டவரின் கணிப்பை ஒதுக்கித் தள்ள முடியாது!'' என்று அழுத்தமாக அடிக்கோடு சொன்னதும் இங்கே கவனிக்கத்தக்கது.
இதைப்பற்றி ராஜபக்ஷே தரப்பினரோ, ''சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த ஆரம்ப கால அரசியலில் பெரும்பான்மையான மந்திரிகள் இலங்கைத் தமிழர் களே. சட்டசபையில் அவர்களது எண்ணிக்கை காலப்போக்கில் குறைந்து வந்தாலும், லீ குவான் யூவுக்கு அவர்கள் மீது ஒரு தனிப் பற்று எப்போதுமே உண்டு.
இலங்கை மீதான அவரது கோபத்துக்கு வேறு காரணமும் உண்டு... இலங்கையும் சிங்கப்பூரின் அளவில் உள்ள, சுற்றுலாவை மையமாகக்கொண்ட சிறிய தீவுதான். சிங்கப்பூரைவிட இங்கு அதிக இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், சிங்கப்பூர் அளவுக்கு இலங்கை வளர்ச்சி அடையாததற்கு காரணம், அங்கு உள்ளது போன்ற சகல வசதிகளுடன் கூடிய துறைமுகம் இல்லை. இதனாலே, பல நாடுகளும் சிங்கப்பூர் மூலமாகத் தங்களது வர்த்தகத்தை மேற்கொண்டு அந்த நாட்டை வளர்த்தன. இப்படி இருக்கும் நிலையில், தாய்லாந்தில் பல வருடங்களாக முடங்கிக்கிடந்த செயற்கைக் கால்வாய் ('க்ரா கால்வாய்') திட்டம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அது வெற்றிகரமாகச் செயல்படுத்தப் பட்டால், சிங்கப்பூரின் வளர்ச்சி தடை படும். இதன் மூலம் இந்தியா, வங்கதேசம், இலங்கை போன்ற தெற்காசிய நாடு களில் வர்த்தகம் பெருகிவிடும். கிடப்பில் கிடந்த அந்தத் திட்டத்தின் பேச்சுவார்த்தை சமீப காலங்களில் அடிபட... அதில் பதறிப்போய்தான் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுகிறார் லீ'' என்று ஓணானுக்கும் டைனோஸருக்கும் முடிச்சுப் போடுகிறார்கள்!
நன்றி ஆனந்தவிகடன்
0 comments:
Post a Comment