கே.பி அவர்களுக்கு ஓர் திறந்தமடல் - சேரமான்
அமைச்சரோ அல்லது முதலமைச்சரோ...
தெரியவில்லை.
மாண்புமிக்கவரோ அல்லது மேன்மைதங்கியவரோ...
அறியவில்லை.
கே.பியோ, குமரன் பத்மநாதனோ அல்லது செல்வராசா பத்மநாதனோ...
புரியவில்லை.
எவராயிருப்பினும் தவறாக விளித்திருப்பின் மன்னித்தருள்க!
ஐயா!
விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளோடு வாழ்ந்தவர் நீங்கள்.
விடுதலைக்காகவே புலம்பெயர்ந்தவர் நீங்கள். தேசங்கள் பல அலைந்து நிதியும், ஆயுதமும் திரட்டியோரின் வலியை நன்கு அறிந்தவரும் நீங்கள்.
இலங்கை உங்களைத் தேடியது.
இந்தியா உங்களைத் தேடியது.
இன்ரர்போலும் உங்களைத் தேடியலைந்தது.
இருந்தாலும் எல்லோர் கண்ணில் மண்ணைத் தூவி...
எல்லோர் காதிலும் பூவைச் சுற்றி...
எல்லோர் வாயிலும் துணியை அடைத்து...
முழு உலகையும் குழப்பியடித்த சாகசக்காரன் அல்லவா நீங்கள்?
இறுதிவரை உங்களை எங்களில் ஒருவராக அல்லவா நினைத்திருந்தோம்?
ஆனால் எங்களையே முட்டாளாக்கி எங்களையே அழித்துவிட்டீர்களே!
எல்லோர் கண்ணிலும் நீங்கள் மண்தூவிய பொழுது, அது எங்கள் கண்ணையும் மூடிவிடும் என்பதை நாங்கள் அறியவில்லைதான்.
எல்லோர் காதிலும் நீங்கள் பூச்சுற்றிய பொழுது, எங்கள் காதிலும் நீங்கள் பூச்சுற்றுவீர்கள் என்று நாங்கள் நினைக்கவில்லைதான்.
எல்லோர் வாயிலும் நீங்கள் துணியை அடைத்த பொழுது, எங்கள் வாயும் அடைக்கப்படும் என்று நாங்கள் எண்ணவில்லைதான்.
முழு உலகையும் நீங்கள் குழப்பிய பொழுது, எங்களையும் குழப்புவீர்கள் என்று நாங்கள் நினைக்கவேயில்லைதான்.
ஐயனே!
2003வரை நீங்கள் ஆற்றிய பணிகளை ஒருபுறம் தள்ளிவைப்போம். அதன் பின்னர் ஓய்வூதியம்பெற்று நீங்கள் ஒதுங்கியிருந்ததாகக் கூறப்படும் ஐந்தாண்டுகளையும் ஒதுக்கிவைப்போம்.
ஆனால் அதன் பின்னர் நீங்கள் செய்தது எல்லாம் படுபாதகத்தனம். அண்ணன் வைகோவின் வார்த்தைகளில் கூறுவதானால் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.
2009இல் உங்களை ரொபேர்ட் ஓ பிளேக் சந்தித்து ஆயுதக் களைவுபற்றிப் பேசியதும்...
ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு அரசியல் போராட்டத்தில் புலிகள் ஈடுபட வேண்டும் என்று தொலைபேசியில் எரிக் சுல்கைம் கூறியதும்...
ஆயுதங்களைக் கொள்கலன்களில் பூட்டி ஐ.நாவிடம் புலிகள் ஒப்படைக்க வேண்டும் என்று உங்களிடம் பா.சிதம்பரம் சூசகமாக அறிவுறுத்தியதும்...
அதை அப்படியே தேசியத் தலைவரிடம் ஒப்புவித்தவர் அல்லவா நீங்கள்? அதற்காகவே வாங்கிக்கட்டிக் கொண்டவர் அல்லவா நீங்கள்!
‘புலிகளின் ஆயுதங்கள் மக்களின் ஆயுதங்கள், இந்த ஆயுதங்களே மக்களின் பாதுகாப்புக் கவசங்கள்' என்று எங்கள் மறைந்த தேசத்தின் குரல் கூறிய வார்த்தைகளை நினைவூட்டித்தானே உங்கள் ஆயுதக் களைவு ஆசையை நாங்கள் மறக்க வைத்தோம்.
ஞாபகம் வருகின்றதா? நினைவில் இருக்கின்றதா? சரி. அதுதான் போகட்டும்.
இறுதிக்கணங்களில் மக்களைக் காப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உங்களிடம் நடேசன் அண்ணா கேட்ட பொழுது...
களநிலவரங்களை தளபதி சூசை எடுத்து விளக்கிய பொழுது...
நீங்கள் பேசிய பசப்பு வார்த்தைகள் என்ன கொஞ்ச நெஞ்சமா?
ஐ.நா செக்கியூரிட்டிக் கவுன்சிலில் பேசுவதாகக் கூறினீர்கள்.
நியூயோர்க்கில் இராசதந்திரம் செய்வதாகக் கூறினீர்கள்.
ஜெனீவாவில் ஐ.சி.ஆர்.சியுடன் கதைத்துக் கொண்டிருப்பதாகக் கூறினீர்கள்.
கூறிக்கொண்டேயிருந்தீர்கள். நீங்கள் மட்டுமா கூறிக்கொண்டிருந்தீர்கள், உங்கள் வழித்தடம் பின்பற்றுவோரும் அல்லவா கூறிக்கொண்டிருந்தார்கள்!
புலிகளுக்குப் பின்னரான காலம்பற்றி கிலாரி கிளின்ரன் பேசிய பொழுது அதனை வரவேற்று அறிக்கை விட்டீர்கள்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று பராக் ஒபாமா பேசிய பொழுது அதை நல்லெண்ண சமிக்ஞை என்று கதையளந்தீர்கள்.
எங்களுக்கு அப்பொழுது எதுவும் புரியவில்லைதான். எல்லாம் இராசதந்திரம் என்று நினைத்திருந்தோம்.
உங்கள் இராசதந்திரிகளையும் நம்பியிருந்தோம். எல்லாம் நடந்து முடிந்த பின்னரும் அது உங்களின் கைங்கரியம் என்று எங்களுக்குப் புரியவில்லை. கருணாவைத் திட்டினோம். கருணாநிதியை சபித்தோம். அந்த நேரத்தில் உங்களை மட்டும் நாங்கள் மறந்தேவிட்டோம்.
எங்கள் தேசியத் தலைவன் வீரமரணம் எய்திவிட்டதாக நீங்கள் அறிவித்த பொழுது...
அடுத்த தலைவன் நீங்களே என்று உங்களுக்கே நீங்கள் சுயமகுடம் சூடிக்கொண்ட பொழுது...
எல்லாம் முடிந்துவிட்டது இனிப் புதிய வழியில் சிந்திப்போம் என்று நீங்கள் அறிவித்த பொழுது...
மட்டக்களப்பில் நின்ற எங்கள் சார்ள்ஸ் அன்ரனிப் படையணி வீரர்களையும், ஜெயந்தன் படையணி மறவர்களையும் சிங்களப் படைகளிடம் நயவஞ்சகமாக நீங்கள் சிறைப்பிடித்துக் கொடுத்த பொழுது...
யாழ்ப்பாணத்தில் எஞ்சியிருந்த எங்களை போராளிகளை சிங்களப் படைகளிடம் நீங்கள் காட்டிக் கொடுத்த பொழுது...
உங்கள் கயமைத்தனம் எங்களுக்குப் புரியவில்லை. தேர்தல், சனநாயகம், பன்மைத்துவம் என்றெல்லாம் நீங்களும் உங்களின் அடியாட்களும் புலம்பெயர்தேசங்களில் கருத்துரைத்த பொழுது, உங்களின் நரித்தனம் எங்களுக்குத் தெரியவில்லை. எங்கள் சூரியத்தேவனுக்காக கலங்கியழுவது போல் தொலைக்காட்சியில் நீங்கள் விம்மிய பொழுது, நீங்கள் நடித்தது எங்களுக்கு புரியவில்லை.
சிங்கள அரசின் உளவாளி என்று உங்களை சிலர் விளித்த பொழுது, ‘எனக்கென்ன இலங்கை அரசு அமைச்சர் பட்டமாக தரப்போகின்றது?' என்று நீங்கள் கேட்டபொழுது, உங்கள் ஆசையை நாங்கள் புரிந்துகொள்ளவில்லைதான்.
இறுதியாக மலேசியாவில் நீங்கள் சிறைப்பட்டதாக அறிந்த பொழுது, சிங்களத்தின் அரூபகரங்கள் எல்லைதாண்டிய பயங்கரவாதமாக விசுவரூபமெடுப்பதாக அல்லவா நாங்கள் நினைத்திருந்தோம்?
எல்லாம் நாடகம் என்று இப்பொழுது அல்லவா புரிகின்றது! சூரியத்தேவனுக்கு முராரி ராகம் எழுதுமாறு உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தனிடம் நீங்கள் கண்ணீர்விட்டு நாடகமாடிய பொழுது அதன் அர்த்தம் எங்களுக்குப் புரியவில்லை.
சூரியத்தேவனுக்கு முடிவுரை எழுதுமாறு பழ.நெடுமாறன் ஐயாவிடமும், வைகோ அண்ணனிடம் நீங்கள் மன்றாடிய பொழுது அதன் அர்த்தம் எங்களுக்குத் தெரியவில்லைதான். டக்ளஸ் தேவானந்தாவுடன் தொலைபேசியில் நீங்கள் கதைத்த கதையும் அப்பொழுது எங்களுக்குத் தெரியாததுதான்.
சிங்கப்பூரில் பிள்ளையானுக்கு நீங்கள் விருந்தோம்பல் அளித்த விடயமும் அப்பொழுது நாங்கள் அறியாததுதான்.
இருந்தாலும் என்ன? இப்பொழுதுதான் எல்லாம் பட்டவர்த்தனமாகிவிட்டதே!
இறுதிப் போர் நிகழ்ந்தேறிய வேளையில் எங்கள் தேசியத் தலைவனை வன்னியை விட்டு வெளியேறி உங்கள் இடத்திற்கு வருமாறு அழைத்தீர்கள்.
நல்லவேளை, உங்கள் அழைப்பிற்கு சூரியத்தேவன் செவிசாய்க்கவில்லை. செவிசாய்த்திருந்தால்?...
நினைக்கவே குலைநடுங்குகின்றது. நெஞ்சம் நடுக்குறுகின்றது.
நயவஞ்சகமாக நடேசன் அண்ணாவையும், எங்கள் தளபதிகளையும் சிங்களம் கொல்வதற்கு துணைநின்றவர் அல்லவா நீங்கள்!
எங்கள் போராளிகளும், மக்களும் சிங்களப் படைகளிடம் சிறைப்பட்டதற்கு காரணமாக அமைந்தவர் அல்லவா நீங்கள்!
இறுதியாக உங்களிடம் ஒரு கேள்வி: கட்டப்பொம்மனின் பாஞ்சாலங்குறிச்சியை வீழ்த்துவதற்கு ஓர் எட்டப்பனும், பண்டாரவன்னியனின் வன்னிமையை வீழ்த்துவதற்கு வெள்ளையர்களுக்கு ஓர் காக்கைவன்னியனும் தேவைப்பட்டது.
ஆனால் எங்கள் தமிழீழத்தை சிங்களம் வீழ்த்துவதற்கு உதவியது யார்?
அத்தியடிக்குத்தியன் டக்ளஸ் தேவானந்தாவா?
காகிதப்புலி கருணாவா?
அல்லது எங்கள் காதில் பூச்சுற்றிய நீங்களா?
டக்ளசும், கருணாவும் ராஜபக்ச சகோதரர்களின் இரண்டு கண்கள் என்றால், நீங்கள் என்ன ராஜபக்ச சகோதரர்களின் நெற்றிக் கண்ணா?
சரி. நீங்கள் விட்டுச்சென்ற பாதையில் பயணிக்கப் போவதாக புலம்பெயர் தேசத்தில் வீரசபதம் எடுத்தவர்கள் இனி என்ன செய்யப் போகின்றார்கள்?
உங்கள் வழியில் கொழும்பு வரப் போகின்றார்களா?
தயைகூர்ந்து விளக்குக. தயக்கம் இருந்தால் புலம்பெயர் தேசத்தில் உங்களுக்கு ஆலவட்டம் பிடிக்கும் உங்கள் ஆலோசகர்களைக் கொண்டாவது விளக்குக!
மீள்பதிவு : கருவேங்கை மறவன்
Subscribe to:
Posts (Atom)