அந்தக் குழந்தையின் சுகப் பிரசவம் முதல் அதன் வளர்ச்சி மற்றும் அந்தக் குழந்தையின் வெற்றிப் பயணம் என்பன புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களாகிய எங்கள் ஒவ்வொருவரின் கைகளிலேயே தங்கியுள்ளது.
வாக்குரிமையுள்ள சகலரும் தங்கள் வாக்குகளை செலுத்துவதன் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசின் வெற்றியில் நாங்கள் எல்லோரும் பங்கெடுக்க முடியும்.
பிரிவுகளைப் புறந்தள்ளுவோம்…..
எங்களுக்குள் நாங்களே முட்டி மோதிக்கொள்வது இனியும் தொடருமானால் எங்களை அழிக்க நினைக்கும் எதிரிக்கு அது இலகுவான பாதையை அமைத்துகொடுத்துவிடும். கடந்த காலங்களில் நாங்கள் இழைத்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வது பெரும் முட்டாள்தனம்.
அவன் சார்பான குழு , இவன் சார்பான குழு என எங்களுக்குள் இனியும் பிரிவுகள் வேண்டாம். தானைத் தலைவன் எங்களுக்கு ஒரு நேரிய வழியைத் திறந்து விட்டு மௌனித்து இருக்கின்றான். அவனது மௌனம் எத்தனை காலங்களுக்கு என்று யாருக்குமே தெரிந்துவிடப் போவதில்லை.
அது அவனுக்கு மட்டுமே வெளிச்சம். ஆனால் அந்த மௌனத்தை பயன்படுத்தி மீண்டும் ஈழத் தமிழினத்துக்குள் பிரிவுகளை ஏற்படுத்த ஒரு சில தனிநபர்கள் முயற்சித்துக் கொண்டு இருக்கின்றார்கள். அந்த நபர்கள் விளையாடுவதற்கு நாடு கடந்த தமிழீழ அரசவை ஒன்றும் பொம்மலாட்டம் போடும் களம் அல்ல என்று தேர்தல் மூலம் நிரூபிப்போம்.
நாடு கடந்த அரசவையில் தமது செல்வாக்கை நிலைநாட்டுவதற்காக – உருத்திரகுமாரைப் புறந்தள்ளுவதற்காக- மேலே குறிப்பிட்ட நபர்கள் தங்களது வேட்பாளர்களையும் களமிறக்கியுள்ளார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வேட்பாளர்களை இனம்கண்டு அவர்களுக்கு வாக்குகள் மூலம் சாட்டையடி கொடுக்கவேண்டியது புலம்பெயர் தமிழர்களாகிய எங்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும். எனவே எங்கள் பெறுமதிமிக்க வாக்குகளைத் தகுதியுடையவர்களுக்கு வழங்குவதன் மூலம் எங்கள் தலைவனின் நாடாளுமன்றத்தை நாங்கள் சிறப்பாக அமைத்துக்கொள்ள உதவமுடியும்.
இது சிறிலங்கா நாடாளுமன்றம் அல்ல…
தலைவனின் தீர்க்கதரிசனச் சிந்தனைகளில் தமிழீழ அரசவையும் ஒன்று. தனது சொந்த நிலத்தில் நிகழும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அந்த அரசவை இன்று நாடு கடந்து அமையப் போகின்றது. என்றோ ஒருநாள் அது தனது சொந்த மண் திரும்பப் போகின்றது.
எனவே தகுதியான வேட்பாளர்களை நாடு கடந்த தமிழீழ நாடாளுமன்றத்துக்கு அனுப்பி தமிழீழ நாட்டைச் சிறப்புறச் செய்வோம். கூத்தாடிகளும் அடிக்கடி கட்சி மாறுபவர்களும் பணத்திற்காக இனத்தை விற்கின்றவர்களுமாக நிரம்பி வழியும் சிறிலங்காவின் நாடாளுமன்றமாக எங்கள் இனத்தின் அரசவை அமையக்கூடாது என்பதில் நாங்கள் திட்டவட்டமாக இருக்கவேண்டும்.
அன்பான புலம்பெயர் மக்களே…
மௌனிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் தொடர்ந்தும் மௌனிக்கப்பட்டதாகவே இருக்கட்டும். எங்களைப் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தியவர்கள் இனி விழிபிதுங்கப் போகின்றார்கள். நாங்கள் இனி ஜனநாயக வழயில் வீறுநடை போடப்போகின்றோம். எனவே அந்த ஜனநாயகச் சமர்களத்;தில் தீரத்துடன் சமர் புரிவதற்கு தகுந்த தகுதி உடையவர்களை நீங்கள் உறுப்பினராகத் தெரிவுசெய்யுங்கள்.
நாங்கள் இன்னும் பயணிப்பதற்கு நீண்ட தூரம் உள்ளது. எனவே தலைவனின் நாடாளுமன்றம் சிறப்புற அமையப்பெற வீறுகொண்டு புறப்படு தமிழா……தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் .